

ரயில்வே துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. ஆனால், ரயில்வே துறை திறம்படச் செயல்பட, தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்தார்.
ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் இன்று நடந்தது. இதில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், கேள்விக்குப் பதில் அளித்துப் பேசியதாவது:
''கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே துறையில் எந்தவிதமான பயணிகளும் விபத்தின் மூலம் உயிரிழக்கவில்லை. இதன் மூலம் ரயில்வே துறை பயணிகளின் நலனில் கூடுதலான அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே விபத்தில் பயணி உயிரிழந்தார். அதன்பின் விபத்தின் மூலம் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை. ரயில்வே துறை பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுத்துறையோடு இணைந்து தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டால்தான் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
ரயில்வே துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. ரயில்வே துறை என்பது ஒவ்வொரு இந்தியரின் சொத்து. தொடர்ந்து இந்தியர்களின் சொத்தாகவே இருக்கும். அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்பாடும். ஆனால், ரயில்வே துறை சிறப்பாகச் செயல்படத் தனியார் முதலீடுகள் அவசியம். தனியார் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2019-20ஆம் நிதியாண்டில் ரயில்வே துறையில் 1.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது. இது 2021-22ஆம் ஆண்டில் ரூ.2.15 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.