

மத்திய அரசு லாபத்தை தனியார்மயமாக்குகிறது, நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது என்று வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டித்துள்ளார்.
நடப்பு நிதிஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த அறிவிப்பில், " 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் அதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்டப்படும்" என அறிவித்தார். வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், அதிகாரிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கும், வங்கிச் சீரமைப்பு நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும், இன்றும் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் 9 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாடுமுழுவதும் பங்கேற்றுள்ளனர். 18-ம் தேதி எல்ஐசி நிறுவனத்தின் ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " மத்திய அரசு லாபத்தைத் தனியார் மயமாக்குகிறது. இழப்பை, நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது. இந்தியாவின் நிதிப்பாதுகாப்பில் கடுமையாகச் சமரசம் செய்யும் நடவடிக்கையாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.