

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், மீண்டும் கடைகள் அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புனே மாவட்டத்தில் நேற்றுபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வைரஸ் பரவலை பொறுத்துஅடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமராவதி மாவட்டத்தில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாக்பூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது.
மும்பையின் பல பகுதிகளில் மக்கள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். சந்தைகள், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் கட்டுப்பாடு இன்றி சுற்றி வருகின்றனர். முககவசம் அணியாமலும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமலும் அவர்கள் விருப்பம் போல் உலவி வருகின்றனர்.
இதனையடுத்து மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும், மீண்டும் கடைகள் அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என மகாராஷ்டிர மாநில அரசு எச்சரித்துள்ளது.