

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த மர்ம கார் விவகாரத்தில், இரவு நேரத்தில் கேமராவில் சிக்கிய நபர் காவல் துறைஅதிகாரி சச்சின் வாஸா என்றுதேசிய புலனாய்வுத் முகமை அதி காரிகள் விசாரித்து வருகின்றனர்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பையில் உள்ள ‘அன்டாலியா’ பங்களா அருகே கேட்பாரற்று கிடந்த ஸ்கார்பியோ காரில் ஜெலட்டின் வெடிபொருள் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில் அந்த கார் வர்த்தகர் ஹிரன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிந்தது. அவரை தேடி வரும் நிலையில், நீரோடையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது மரணத்தில் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வாஸுக்கு தொடர்பு இருப்பதாக ஹிரனின் மனைவி புகார் தெரிவித்தார். இதையடுத்து, மும்பை குற்றப்பிரிவில் இருந்து சச்சின் வேறு பணிக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க தொடங்கியது. அதிகாரிகள் நேற்றுமுன்தினம் சச்சின் வாஸிடம் 12 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்கார்பியோ காரில் வெடிபொருள் வைத்த விஷயத்தில் தனக்கும் சிறிது தொடர்பிருப்பதாக வாஸ் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரைஎன்ஐஏ அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரை மார்ச் 25-ம் தேதிவரை என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், முகேஷ் அம்பானி வீட்டருகே ஸ்கார்பியோ கார் இரவில் நின்றிருந்த போது, அந்த வழியாக சாலையில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான கவச உடையை (பிபிஇ கிட்) அணிந்துள்ளார். அவர் சச்சின் வாஸா அல்லது வேறு யாராவதா என்று என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த போது சச்சின் வாஸ் எங்கிருந்திருந்தார் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் மும்முரமாக உள்ளனர்.
மகாராஷ்டிர போலீஸில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் சச்சின் வாஸ் சேர்ந்தார். அதன்பிறகு மும்பையில் ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று பெயரெடுத்தார். சுமார் 63 குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட குழுவில் இவரும்இடம்பெற்றிருந்தார்.மேலும், கடந்த 2008-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி ஆதரவாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் வாஸ் பணியிடை நீக்கம்
மும்பை காவல் துறை செய்தித் தொடர்பாளர் மற்றும் துணை ஆணையர் எஸ்.சைதன்யா நேற்றுகூறும்போது, “காவல் துறை கூடுதல் ஆணையர் (சிறப்புப் பிரிவு) உத்தரவுப்படி, காவல் துணை ஆய் வாளர் சச்சின் வாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.