Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க உறுதி: இந்தியா உள்ளிட்ட குவாட் அமைப்பு தலைவர்கள் தகவல்

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக குவாட் அமைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கின. கடைசியாக இந்த அமைப்பில் சேர்ந்தது ஆஸ்திரேலியாவாகும். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல், தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக, குவாட் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு அண்மை யில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர்ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் காணொலி வழியாக பங்கேற்றனர்.

அந்த உச்சி மாநாட்டின்போது, இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது என குவாட் தலைவர்கள் உறுதி பூண்டதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

குவாட் என்பது ஒரு பொதுவான தொலைநோக்குத் திட்டங்களை முன்னேற்றுவதற்கும் அமைதி மற்றும் நாடுகளின் செழிப்பை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒத்த எண்ணம் கொண்ட கூட்டமைப்பு ஆகும். இந்த இலக்குகளை நோக்கிச் செயல்படும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் நாடுவோம்.

அண்மைக் காலங்களில் உலகத்தையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் பிரச்சினையைத் தீர்க்க அனைத்து முன்னேறிய நாடுகளும் போராடி வருகின்றன. அந்த வகையில் குவாட் அமைப்பு நாடுகள்இணைந்து கரோனா வைரஸுக்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

சிறந்த தடுப்பூசி

கரோனா வைரஸ் பிரச்சினையைத் தீர்க்க பாதுகாப்பான, எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான, சிறந்த தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க குவாட் அமைப்பு சார்பில் உறுதி பூணப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைத் தீர்க்க குவாட் அமைப்பு உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து பாடுபடும்.

இவ்வாறு குவாட் தலைவர்கள் கூறியுள்ளதாக செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x