

ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மேல் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதனை வரலாற்று நிகழ்வு என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1315 மீட்டர் நீளத்தில் 17 இடைவெளி பகுதிகளைக் கொண்ட ரயில்வே பாலம் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் மொத்த நீளத்தில் 476 மீட்டர் ஆற்றின் மீது கட்டப்பட்டுவருகிறது. பாலத்தின் அதிகபட்ச உயரம் கடல் மட்ட அளவிலிருந்து 359 மீட்டராக உள்ளது. பிரான்சில் உள்ள ஈஃபில் டவர் உயரம் 304 மீட்டர் ஆகும். இதன்மூலம் இந்த ரயில்வே பாலத்துக்கு உலகின் மிக உயரமான கட்டுமானம் என்ற பெருமை கிடைத்துள்ளது.
ரூ.1,250 கோடி மதிப்பிலான இந்தப் பாலம் 266 கிமீ வேகத்தைத் தாங்கக் கூடியது. மேலும் இதன் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், பாலத்தின் கட்டுமான வீடியோவை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “செனாப் ஆற்றின் மீது கட்டப்படும் ரயில்வே பாலத்தின் கீழ்பக்க வளைவு கட்டி முடிக்கப்பட்டுள்ளது, மேல்பக்க வளைவு விரைவில் கட்டிமுடிக்கப்படும். உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக உருவாகும் இப்பாலம் மிக முக்கிய வரலாற்று நிகழ்வாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பாலம் 2021 டிசம்பரில் முழுவதுமாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க இந்த ரயில்வே பாலம் பயன்படும் எனவும் அவர் கூறினார்.