

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் வசீம் ரிஜ்வீ, தொடக்கத்தில் இருந்தே அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவானக் கருத்துக்களை தெரிவித்து வந்தார். சன்னி பிரிவு முஸ்லிம்களின் மற்ற விவகாரங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துக்கள் கண்டனத்துக்கு உள்ளாகின.
‘‘டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடு காடாக மாற்ற வேண்டும். நாட்டின் மதரஸாக்களில் தீவிர வாதம் வளர்கிறது’’ என்று ரிஜ்வீ கூறியிருந்தார்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தில் ரிஜ்வீ தாக்கல் செய்த மனுவில், ‘‘முஸ்லிம்களின் புனிதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும்’’ எனக் கோரி உள்ளார். இவை முஸ்லிம்கள் இடையே தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், புனிதக் குர்ஆனையும், இறைத் தூதர் முகம்மது நபியையும் ரிஜ்வீ அவமதித்து விட்டதாக ஷியா, சன்னி ஆகிய இரண்டு பிரிவினரும் புகார் கூறுகின்றனர்.
இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ரிஜ்வீயை கைது செய்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று உ.பி. முஸ்லிம்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்காக, நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற சன்னி பிரிவு முஸ்லிம்கள் மாநாட்டில் ரிஜ்வீயை ‘முஸ்லிம் அல்லாதவர்’ என்றும் பத்வா அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷியா பிரிவின் முக்கியத் தலைவர் மவுலானா கல்பே ஜாவேத் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘தம்மை ஜிஹாதிகள் எனக் கூறிக் கொள்ளும் தலீபான் உள்ளிட்ட அமைப்புகள், தீவிரவாதத் தை வளர்ப்பவர்கள். இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜிஹாத் என்பது உயிர்களை கொல்வது அல்ல. மாறாக, வாழ்க்கையை பாதுகாப்பது. தம் மீதுள்ள சிபிஐ வழக்கை திசை திருப்பவே குர்ஆன் மீது வழக்கு தொடுத்து, நாட்டில் மதநல்லிணக்கத்தை குலைக்க ரிஜ்வி முயல்கிறார்’’ என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்று கூறும் வசீம், தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பாஜக மற்றும் இந்துத்துவாவுக்கு ஆதரவாக பேசி வந்தார். உ.பி. மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவராக இருந்த வசீம் மீது, 2016, 2017-ம் ஆண்டுகளில் லக்னோ மற்றும் அலகாபாத்தில் வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பு மற்றும் லஞ்ச வழக்குகள் பதிவாகின. கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்விரண்டு வழக்குகளும் தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.