

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு வசதியாக, இந்திய மருத்துவ கவுன்சில் (முதுநிலை ஆயுர்வேத கல்வி) விதிமுறைகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு அலோபதி (ஆங்கில) மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார் பில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஆயுர் வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஏதுவாக மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும். பாடதிட்டத்தில் நவீன மருத்துவத்தை சேர்க்கும் அதிகாரம் கவுன்சிலுக்கு இல்லை என உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.