சோட்டா ராஜன் மீதான வழக்குகளை சிபிஐ.க்கு மாற்ற காங்கிரஸ் எதிர்ப்பு: மும்பை போலீஸை குறைத்து மதிப்பிடுவதாக புகார்

சோட்டா ராஜன் மீதான வழக்குகளை சிபிஐ.க்கு மாற்ற காங்கிரஸ் எதிர்ப்பு: மும்பை போலீஸை குறைத்து மதிப்பிடுவதாக புகார்
Updated on
1 min read

நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீதான எல்லா வழக்குகளையும் சிபிஐ.க்கு மாற்ற மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மும்பை தொடர் குண்டுவெடிப் பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் கூட்டாளி சோட்டா ராஜன். தாவூத்திடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வந்தார். இவரை இந்தோனேசிய போலீஸார் கடந்த மாதம் 25-ம் தேதி கைது செய்தனர். இதை யடுத்து, சிபிஐ அதிகாரிகள், மும்பை மற்றும் டெல்லி போலீ ஸார் இந்தோனேசியா சென்று சோட்டா ராஜனை தனி விமானத்தில் அழைத்து வந்தனர். டெல்லிக்கு நேற்று அதிகாலை சோட்டா ராஜனை அழைத்து வந்து பலத்த பாதுகாப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘‘சோட்டா ராஜன் மீது மும்பை போலீஸார் பல வழக்குகள் பதிவு செய்துள் ளனர். அந்த வழக்குகள் எல்லாம் சிபிஐ.க்கு மாற்றப் படும். ஏனெனில், சோட்டா ராஜன் மீதான வழக்குகள், தேசிய மற்றும் சர்வதேச குற்றங்களாக உள்ள தால் சிபிஐ விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று மகாராஷ்டிரய கூடுதல் தலைமை செயலர் (உள்துறை) கே.பி.பக் ஷி அறிவித்தார்.

இதற்கு முக்கிய எதிர்க்கட்சி களான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் நேற்று கூறுகையில், ‘‘முதலில் ஷீனா போரா கொலை வழக்கை, சிபிஐ.யிடம் மகாராஷ்டிர அரசு ஒப்படைத்தது. இப்போது சோட்டா ராஜன் வழக்குகளை ஒப்படைக்க போவதாக கூறியுள்ளது. எல்லா வழக்குகளையும் சிபிஐ.யிடம் ஒப்படைத்து விட்டால், மும்பை போலீஸார் என்ன செய்வார்கள். எனவே, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:

சோட்டா ராஜனை மும்பைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி நீதியின் முன் நிறுத்துவோம் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், மும்பை போலீஸ் ஆணையர் அகமது ஜாவீத்தும் கூறினர். இப்போது எதற்காக அவரை டெல்லிக்கு அழைத்து சென்றார்கள்?

பத்திரிகையாளர் ஜோதிர்மாய் தே கொலை வழக்கு, பக்மோடியா சாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு போன்ற எல்லா பெரிய வழக்குகளையும் சிபிஐ.யிடம் ஒப்படைத்து விட்டனர். மும்பை போலீஸாரின் திறன் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டதா? மகாராஷ்டிர அரசின் முடிவு, மும்பை போலீஸாரின் திறமையை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது.

இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.

‘‘உலகில் உள்ள போலீஸ் படைகளில் மும்பை போலீஸ் படையும் ஒன்று. எந்த வழக்கையும் புலனாய்வு செய்ய கூடிய திறமை அவர்களுக்கு உள்ளது’’ என்று மகாராஷ்டிர அரசின் முடிவை, முன்னாள் டிஜிபி டி.சிவானந்தன் விமர்சித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in