அச்சுறுத்தல் தொடர்கிறது; கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கைவிடாதீர்கள்: ராகுல் காந்தி எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் இன்னும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஆதலால், மக்கள் தொடர்ந்து கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவத் தொடங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியபின், மெல்ல மெல்ல பாதிப்பு அடங்கத் தொடங்கியது. முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், முதியோர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், மக்கள் முறையாக கரோனா தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்து வருவதால் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,291 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். கடந்த 85 நாட்களுக்குப் பின் இந்த அளவுக்கு ஒரே நாளில் கரோனா பாதிப்பு இப்போதுதான் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 13 லட்சத்து 85 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 5 நாட்களாக கரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.19 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 96.68 ஆகக் குறைந்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில்தான் கரோனா வைரஸ் மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கரோனா தடுப்பு முறைகளைத் தீவிரமாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்விட்டரில் ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், "நான் ஏற்கெனவே எச்சரித்திருந்தேன். கரோனா வைரஸ் எனும் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. ஆதலால் தயவுசெய்து மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்த வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதிக்கு மேல், கரோனா வைரஸ் பரவல் நாட்டில் மெல்ல மெல்ல அதிகரித்து வளைகோடு உயர்ந்துள்ளதைத் தெரிவிக்கிறது.

ராகுல் காந்தி கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "மத்திய அரசு கரோனா குறித்து கவனக்குறைவாக இருக்கிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை" என எச்சரித்திருந்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முதலில் கரோனா வைரஸ் குறித்து எச்சரித்ததும் ராகுல் காந்திதான். மிகப்பெரிய தொற்றுநோய் சுனாமி வரப்போகிறது, மத்திய அரசு விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in