சீட் கிடைக்காததால் மொட்டை அடித்துக் கொண்ட கேரள மகளிர் காங்கிரஸ் அணி தலைவி; பதவியைத் துறந்தார்

சீட் கிடைக்காததால் மொட்டை அடித்துக் கொண்ட கேரள மகளிர் காங்கிரஸ் அணி தலைவி; பதவியைத் துறந்தார்
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படாததைக் கண்டித்து அம்மாநில மகளிரணி தலைவி லத்திகா சுபாஷ் மொட்டை அடித்துக் கொண்டார். உடனடியாக கட்சிப் பதவியையும் துறந்தார்.

கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 140 தொகுதிகளுக்கான தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் களத்தில் உள்ளன.

இந்நிலையில், கேரள காங்கிரஸில் தொடர்ந்து சர்ச்சைகளும், குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் காங்கிரஸின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்தார்.

இதேபோல், மாநில காங்கிரஸ் செயலாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், மகளிர் காங்கிரஸ் செயலாளர் சுஜயா வேணுகோபால் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் அனில் குமார் ஆகிய 4 பேரும் கட்சியிலிருந்து விலகனர்.
இவர்கள் 4 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி, மாநிலத்தில் காங்கிரஸ் சர்ச்சைகளுக்கு குறைவில்லாத நிலையில் தற்போது மகளிர் காங்கிரஸ் தலைவியும் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

இந்த முறை, 27 வயது பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதை வரவேற்கிறேன். ஆனால், பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நான் இந்தக் கட்சிக்காக நீண்ட காலமாக பணியாற்றி வருகிறேன். காங்கிரஸ் தலைமை கட்சிக்காக உழைத்த பெண்களைப் புறக்கணித்துவிட்டது. 20% வேட்பாளர்களுக்காவது ஒதுக்கீடு வழங்கக் கோரியிருந்தோம். சிட்டிங் எம்எல்ஏக்களைவிட எனக்கு அதிக அனுபவம் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக நான் கட்சிக்காகப் பணியாற்றி வருகிறேன். ஆனால், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் என் பெயர் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அதனால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். ஆனால் வேறு கட்சியில் இணைய மாட்டேன். சுயேச்சையாகப் போட்டியிடுவது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எட்டவில்லை. அது குறித்து கலந்தாலோசித்து முடிவு எட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மகளிர் காங்கிரஸ் அலுவலகத்தின் முற்றத்திலேயே அவர் மொட்டையடித்துக் கொண்டார். அப்போது உடன் இருந்த மற்ற பெண் நிர்வாகிகள் கண் கலங்கினர்.

மாநில மகளிர் அணி தலைவியின் இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன், “லத்திகா மிகவும் பணிவான கட்சித் தொண்டர். அவருக்கு இம்முறை சீட் கொடுக்க முடியவில்லை. அவரை புறக்கணிக்கவில்லை. சீட் தராததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எதிர்காலத்தில் நாங்கள் நிச்சயமாக அவருக்கு இடமளிப்போம்.” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in