

ஸ்ரீ நகர்: தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற அமர்நாத் குகைக் கோயில். ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கோயிலுக்கு யாத்திரையாக வந்து பனிலிங்கத்தை தரிசித்து செல்வது வழக்கம்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை குறித்து அந்தக் கோயிலின் வாரியக் குழுக் கூட்டம் நகரில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில், வரும் ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை மொத்தம் 56 நாட்களுக்கு அமர்நாத் யாத்திரையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு-காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றில் இந்த முன்பதிவை செய்து கொள்ளலாம். இந்த யாத்திரையின் போது கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.