

மத்திய பட்ஜெட்டில் பங்கு விலக்கல் தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விலக்கல் மேற்கொள்வதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பாதாக அப்போது அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பங்கு விலக்கல் மேற்கொள்ளப்பட இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான முதல் பட்டியலை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது. இந்தப் பட்டியலில் 12 பொதுத் துறை நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
நிதி ஆயோக் தயாரித்த இந்தப் பட்டியலை, முதலீடு மட்டும் பொது சொத்து மேலாண்மைத் துறையும் பங்கு விலக்கல் தொடர் பான செயலாளர்கள் குழுவும் மதிப்பீடு செய்யும்.
மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள், வங்கித் துறை, காப்பீடு துறை, பாதுகாப்புத் துறை, விண்வெளி, அணு ஆற்றல், நிதி சேவைகள், போக்குவரத்துத் துறை, தொலைத் தொடர்புத் துறை உள்ளிட்ட துறைகள் சார்ந்த நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட இருக்கும் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மக்கள் அதிருப்தி
தன்னாட்சி நிறுவனங்கள், கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய உணவு கூட்டுஸ்தாபனம், இந்திய விமான நிலைய ஆணையம் போன்றவை பட்டியலில் சேர்க்கப் படவில்லை. பங்கு விலக்கல் அறிவிப்பு மக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுத் துறை வங்கிகள் தனியாருக்கு விற்பதை எதிர்த்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் மார்ச் 15,16 இரு தினங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.