Last Updated : 14 Mar, 2021 06:59 PM

 

Published : 14 Mar 2021 06:59 PM
Last Updated : 14 Mar 2021 06:59 PM

' அடிபட்ட புலி ஆபத்தானது': சக்கரநாற்காலியில் அமர்ந்து மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தாவில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேரணியில் பங்கேற்க முதல்வர் மம்தா பானர்ஜி : படம் ஏஎன்ஐ

கொல்கத்தா

மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் மாநிலத்தில் ஜனநாயகம் மீண்டும் வரும். மேற்கு வங்கத்துக்கு எதிரான சதிகள் அனைத்தும் அழிக்கப்படும். என்னுடைய உடைந்த காலுடன் நான் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். காயம்பட்ட புலி ஆபத்தானது என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்தார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறுகிறது.294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கப் போராடி வருகிறது, அதேநேரத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, கடந்த 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். மம்தாவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்தார்.

நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்துக்கு மம்தா பானர்ஜி சென்றிருந்தபோது, அவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையிலிருந்து இன்று திரும்பினார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரே முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள மேயோ சாலை முதல் ஹசாரே சாலை வரை ஊர்வலம் சென்றார்.

இந்த ஊர்வலத்தின் முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது :

என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகள் நடந்தன, அவை தோல்வி அடைந்துவிட்டன. இந்த சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன்.

என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஒருபோதும் சரணடைந்தது இல்லை. யாரிடமும் தலைவணங்கி நின்றதில்லை.

என்னை பரிசோதித்த மருத்துவர்கள் பிரச்சாரத்துக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனால், காயத்தில் பல நாட்களை ஏற்கெனவே இழந்துவிட்டதால், இன்று பேரணியில் கண்டிப்பாகப் பங்கேற்பேன் என்று தெரிவித்தேன். சர்வாதிகாரத்தால் மக்கள் ஜனநாயகத்தில் அனுபவிக்கும் துன்பத்தைவிட, என்னுடைய வலி பெரிதானது அல்ல. இன்று மாலை துர்காபூர் சென்று நாளை இரு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க இருக்கிறேன்.

நான் தொடர்ந்து போராடுவேன். எனக்கு மக்கள் வாக்களித்தால், ஜனநாயகத்தை மீண்டும் மக்களுக்கு வழங்குவேன். மே.வங்கத்தை சுற்றியிருக்கும் அனைத்து சதிகளும் அழிக்கப்படும். உடைந்த காலுடன் சக்கரநாற்காலியுடன் சென்று நான் பிரச்சாரம் செய்வேன். காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x