

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில்போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சாலையில் செங்கற்களால் வீடுகளை கட்டி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர், விவசாய சங்கங்கள் - மத்திய அரசுக்கு இடையே பேச்சு நடைபெறவில்லை.
இந்த சூழலில், விவசாயிகளின் போராட்டமானது வரும் 26-ம் தேதியுடன் 4-வது மாதத்தை எட்டவுள்ளது. இதனைக் குறிக்கும் விதமாக, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி - ஹரியாணா எல்லையான திக்ரியில் பகதுர்ஹார் நெடுஞ்சாலையை ஒட்டி விவசாயிகள் செங்கல் வீடுகளை கட்டி வருகின்றனர்.
எதிர்வரும் கோடைக்காலத்தை சமாளிப்பதற்காக இந்த ஏற்பாடு களை விவசாயிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நீண்ட காலத்துக்கு நடத்தும் நோக்கில், விவசாயிகள் இந்த வீடுகளை கட்டி வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.