

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இலங்கையின் ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது. இதன்படி இலங்கை ரயில்வே துறைக்கு இந்தியா சார்பில் 160 ரயில் பெட்டிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதில் 10 பெட்டிகள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பு, சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர். கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பாக இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இலங்கை அதிபர் கோத்தபயவுடன் தொலைபேசியில் பேசினேன். இருதரப்பு, சர்வதேச ஒத்துழைப்பு, கரோனா வைரஸ் குறித்து விவாதித்தோம். அண்டை நாடுகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. கரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள இருநாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவு செய்யப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பக்லே, யாழ்ப்பாணத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள், தலைவர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது தலைமன்னார் - ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று இந்தியத் தூதர் கோபால் பக்லே உறுதி அளித்தார்.
இலங்கையில் புர்கா அணிய வருகிறது தடை
இலங்கையில் முஸ்லிம் பெண்ககள் புர்கா அணிவதற்கு விரைவில் தடை கொண்டு வரப்படவுள்ளது என்று இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறும்போது, “தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் வகையிலான புர்கா ஆடை அணிவதைத் தடை செய்யவுள்ளோம். இதற்கான ஒப்புதலை இலங்கை கேபினட் வழங்கியுள்ளது.
மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் மதரஸா பள்ளிகளையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. முன்காலத்தில் இலங்கையில் முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் புர்கா ஆடையை அணிந்ததே இல்லை. இது சமீபத்தில் வந்த மத தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதை நாங்கள் நிச்சயம் தடை செய்யத்தான் போகிறோம். இதற்கான ஆணையில் கையெழுதிட்டுள்ளோம்” என்றார்.