

கல்வி, வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் ரீபக் கன்சால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய உளவுத் துறை அதிகாரி பணியிடத்தில் 2,000 காலியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப் பட்டது. அதில் ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மாற்று பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இது அவர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது ஆகும்.
கல்வி, வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும். சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அவர்களை கருத வேண்டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் வழக்கறிஞர் ரீபக் கன்சால் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக தலைமை நீதிபதி பாப்டே அறிவித்தார்.
நிதியுதவிக்கு ஏற்பாடு
கடந்த பிப்ரவரியில் மத்திய சமூக நலத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், "மாற்று பாலினத்தவர்களுக்கு சுகாதாரம், கல்வி, தங்குமிடம், வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதியுதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. எனினும் கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இதுவரை எவ்வித பரிந்துரையும் அளிக் கப்படவில்லை" என்று தெரி வித்தார்.