

மேற்குவங்கத்தில் மார்ச் 27-ம் தேதி முதல் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் காரில் ஏறும்போது மர்ம நபர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில் தலைமை செயலாளர் அலபன் பண்டோபாத்யாயா தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘கார் கதவை சாத்தும்போது முதல்வர் மம்தாவின் காலில் காயம் ஏற்பட்டது’’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
தலைமைச் செயலரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. கார் கதவு எவ்வாறு மூடியது? கதவை மூடியது யார்? முதல்வர் காயமடைந்தது எப்படி என்பன குறித்த முழுமையான விவரங்கள் அறிக்கையில் இல்லை. எனவே மேற்குவங்க தலைமைச் செய லாளர், சிறப்பு பார்வையாளர் அஜய் நாயக், சிறப்பு போலீஸ் பார்வையாளர் விவேக் துபே, ஆட்சியர், போலீஸார் தனித்தனி யாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நேரில் பார்த்தவர்களின் சாட்சியங் களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நந்திகிராம் வட்டாரங்கள் கூறும்போது, "கடந்த 10-ம் தேதி நந்திகிராமில் மம்தா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன்பின் அங்குள்ள சந்தை பகுதியில் அவரது கார் மெதுவாக சென்றது. கார் கதவு திறந்திருந்தது. மம்தா மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டே சென்றார். சந்தை பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் இருந்தது. கூட்ட நெரிசலில் மக்கள் முண்டியடித்ததால் கார் கதவு மூடி முதல்வரின் காலில் ஏற்பட்டது" என்று தெரிவித்தன.
மற்றொரு தரப்பினர் கூறும் போது, முதல்வரின் கார் அங்குள்ள கம்பத்தில் இடித்ததால் கதவு மூடியது. இதில் முதல்வர் மம்தாவின் காலில் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் விவேக் துபே, அஜய் நாயக் ஆகியோர் நந்திகிராமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தலைமை தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், முதல்வர் மம்தா மீது தாக்குதல் நடைபெறவில்லை. தற்செயலான விபத்து காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பார்வையாளர்களின் அறிக்கை மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.