

காந்தகார் விமானக் கடத்தலின்போது, பயணிகளை மீட்பதற்காகப் பிணையக் கைதியாகத் தான் செல்லத் தயார் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஆப்கானிஸ்தான் காந்தகார் சென்ற ஏர் இந்தியா விமானம் ஐசி814 எனும் விமானத்தைப் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடத்தினர். விமானத்தில் இருந்த இந்தியப் பயணிகளை மீட்பதற்காக மத்திய அரசு வேறு வழியின்றி, தீவிரவாதிகளான முஸ்தாக் அகமது ஜார்கார், அகமது உமர் சயீத் ஷேக், மசூத் அசார் ஆகியோரை விடுவித்தது.
அப்போது, வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சராக மம்தா பானர்ஜி பொறுப்பில் இருந்தார். இந்த 3 தீவிரவாதிகளுடன் அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் காந்தகார் சென்று அவர்களை ஒப்படைத்து பயணிகளை மீட்டு வந்தார்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று முறைப்படி இணைந்தார். அப்போது, அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது, காந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசினார். அந்த விமானக் கடத்தல் சம்பவத்தின்போது, மத்திய அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி எவ்வாறு ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டார் என்பதை விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நான் இங்கு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். கடந்த 1999-ம் ஆண்டு காந்தகார் சென்ற ஏர் இந்தியா விமானத்தைத் தீவிரவாதிகள் கடத்தினர்.
அப்போது பயணிகளை மீட்பது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோது, மம்தா பானர்ஜி பேசியவிதம் அனைவரையும் வியக்க வைத்ததது. பயணிகளைப் பத்திரமாக மீட்பதற்காக, நான் வேண்டுமானாலும் தீவிரவாதிகளிடம் பிணையக் கைதியாகச் செல்கிறேன். தொடக்கத்திலிருந்தே போராட்டக் குணம் கொண்டவர் மம்தா பானர்ஜி. தனது உயிரைப் பற்றி மம்தா பானர்ஜி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
நான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முக்கியக் காரணமே, நந்திகிராமில் மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்தபின்தான், நான் அவரின் கட்சியில் சேர முடிவு செய்தேன்" எனத் தெரிவித்தார்.