

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாமலும், சமூக விலகலை முறையாகக் கடைப்பிடிக்காமலும், தொடர்ந்து வழங்கப்படும் எச்சரிக்கையை மதிக்காத பயணிகள் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படும் என்று பயணிகள் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 6 நாட்களில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், கண்டிப்பாக கரோனா பாதுகாப்பு தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் கரோனா விதிகளை முறையாகப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல், சமூக விலகலைப் பின்பற்றாத பயணிகள், தொடர்ந்து வழங்கப்படும் எச்சரிக்கையை மதிக்காத பயணிகள் விமானத்தில் பயணிக்கத் தகுதியற்ற பயணிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அந்தப் பயணிகளுக்கு 3 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 ஆண்டுகள்வரை விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்படும்.
விமானம் புறப்படும் முன்பாக, விமான ஊழியர்கள் வழங்கும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற ஒரு பயணி மறுத்தால், அந்தப் பயணி கீழே இறக்கிவிடப்படுவார்.
விமானத்தில் ஏறி அமர்ந்தபின், பயணி ஒருவர் முகக் கவசம் அணிய மறுத்தால், அல்லது கரோனா தடுப்பு விதிகளை மீறினால், தொடர்ந்து வழங்கப்படும் எச்சரிக்கைகளை மதிக்காமல் இருந்தால் அந்தப் பயணி விதிகளை மதிக்காத பயணி என எடுத்துக் கொள்ளப்படுவார்.
இவ்வாறு கரோனா விதிகளை மீறிய பயணி, விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்படுவார். விமான ஊழியர்களை அவமரியாதையாகப் பேசினால் 3 மாதம் தடையும், தாக்கினால் 6 மாதம் தடையும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுதல், நடந்து கொண்டால், 2 ஆண்டுகள் அல்லது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் குழு அந்த சம்பவம் குறித்து ஆலோசித்து, எந்த வகையான குற்றம் என்று முடிவு செய்து தண்டனை வழங்கும்.
அதேபோல விமானம் புறப்படும் முன்பாக பயணி ஒருவர் கரோனா தடுப்பு வழிகளை மீறினால், பலமுறை எச்சரிக்கை விடுத்தும் விதிகளை மீறினால், அந்த விமான நிறுவனத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்தப் பயணியை ஒப்படைக்கலாம்''.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.