

பாஜகவின் முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சுதீப் பானர்ஜி, டேரீக் ஓ பிரையன், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் இன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் யஷ்வந்த் சின்ஹா இணைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் யஷ்வந்த் சின்ஹா திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
83 வயதான யஷ்வந்த் சின்ஹா, கடந்த 2018ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அதன்பின் புதிய கட்சி ஒன்றை யஷ்வந்த் சின்ஹா தொடங்கினார். தற்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் யஷ்வந்த் சின்ஹா இணைந்திருப்பதால், இன்று பிற்பகல் முதல்வர் மம்தா பானர்ஜியை யஷ்வந்த் சின்ஹா சந்தித்தபின், தன்னுடைய கட்சியை இணைப்பார் எனத் தெரிகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தபின் யஷ்வந்த் சின்ஹா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது நாடு எப்போதும் இல்லாத அசாத்தியமான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் வலிமை என்பது ஜனநாயகத்தில் உள்ள அமைப்புகளின் வலிமையில்தான் இருக்கிறது. இப்போது நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பலவீனமாக இருக்கின்றன.
மத்திய அரசு செய்யும் தவறுகளைத் தடுக்க யாருமில்லை. அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் அரசு ஒருமித்த நம்பிக்கையுடன் நடந்து கொண்டது, ஆனால், தற்போதைய அரசு, நசுக்குவதிலும், வெற்றி பெறுவதிலும் மட்டும் நம்பிக்கையாக இருக்கிறது.
அகாலி தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட பாஜக கூட்டணியிலிருந்து விலகிவிட்டார்கள், தற்போது பாஜகவுடன் யார் இருக்கிறார்கள் " எனத் தெரிவித்தார்.
1960ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா 1984ம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார். கடந்த 1990ம் ஆண்டு நவம்பரில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில் நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா இருந்தார். அதன்பின் வாஜ்பாய் ஆட்சியில் கடந்த 1998 முதல் 2002ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் யஷ்வந்த் சின்ஹா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.