

மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாடுமுழுவதும் கரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஏறக்குறைய ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து. இயல்பு நிலையும் திரும்பி வருகிறது.
இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9-ம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. தற்போது 14 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், 24,882 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,317 பேருக்கும், கேரளாவில் 2,133 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 2,02,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 2,82,18,457 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.