

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 24,882 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 83 நாட்களில் நேற்றைய தொற்று எண்ணிக்கையே மிகவும் அதிகமானது.
இதன்மூலம் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,13,33,728 என்ற அளவை எட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2020 டிசம்பரில் நாடு முழுவதும் 26,624 பேருக்கு தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 24,882 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதோடு தொற்று பாதிப்பால் 140 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 1,58,446 ஆக அதிகரிதுள்ளது.
பாதிப்புகள், உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,09,73,260 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,02,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் சிகிச்சை முடிந்து 19,957 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவில் இதுவரை 22,58,39,273 பேருக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 8,40,635 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதேபோல், இதுவரை 2,82,18,457 பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்கள் மட்டுமே மொத்த தொற்றில் 71.69% பங்களிக்கிறது. பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருக்கிறது.