

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிடப்பட்ட காங்கிரஸ் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் ஜி-23 தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தும் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் இடம்பெறாதது கட்சி மேலிடத்தின் அதிருப்திக்கு சான்றாக உள்ளது.
இருப்பினும் ஜிதின் பிரசாதா, அகிலேஷ் பிரசாதா சிங் ஆகிய இருவர் மட்டும் இந்த நட்சத்திர பிரச்சாரகர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி வத்ரா, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், பூபேஷ் பாகேல், கமல்நாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தீபேந்திர ஹூடா, ஹரி பிரசாத், சல்மான் குர்ஷித், சச்சின் பைலட், ரன்தீப் சிங் சூரஜ்வாலா, ஆர்பிஎன் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் முகமது அசாருதீனும் பிரச்சாரம் செய்கிறார்,
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார் தனிப்பட்ட முறையில் அழைப்புவிடுத்தாலும் அவர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். பாஜகவின் தோல்வியே தங்களின் பிரதான குறிக்கோள் என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜி23 தலைவர்கள் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டது குறித்து கட்சியின் செய்தித்தொடர்பாளார் பவன் கேரா கூறும்போது, "மேற்குவங்கம் மற்றும் இன்னும் பிற மாநிலங்களுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.