

கன்னையா குமாரை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் மாணவி அயிஷி கோஷை இடதுசாரிகள் களம் இறக்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) சார்பில் இவர், மேற்கு வங்க சட்டப்பேரவையின் ஜமூரியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைகழகம்,கல்வி பயிலும் மாணவர்கள் இடையே நிலவும் அரசியலுக்கு அதிக பெயர் போனது.. இதன் முன்னாள் மாணவர்கள் நாட்டின் தேசிய, பிராந்திய மற்றும் மாநில அரசியல் கட்சிகளில் இணைவது வழக்கமாக உள்ளது.
இவர்களில் பலரும் மத்திய, மாநில அமைச்சரவைகளின் உறுப்பினர்களாக வகித்துள்ளனர். சிபிஎம் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.பியான நாசர் உசைன் எனப் பட்டியல் நீள்கிறது.
தம் கல்விக்குப் பின் அரசியலில் நுழைவது என்பது மாறி, மாணவர்களே தேர்தலில் போட்டியிடத் தொடங்கி உள்ளனர். ஜேஎன்யுவில் எம்.பில் பயிலும் மாணவியான அய்ஷி கோஷ் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அய்ஷி, இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பைச் (எஸ்எப்ஐ) சேர்ந்தவர். கடந்த வருடம் ஜனவரி 5 இரவு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் தலைமையில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல், ஜேஎன்யுவில் புகுந்து தாக்குதல் நடத்தியது.
இதில் காயமடைந்த 39 பேரில் அய்ஷி கோஷும் ஒருவர். ஜேன்யுவின் மாணவர் பேரவைத் தலைவியான இவருக்கு தலையில் 18 தையல்கள் போடப்பட்டன.
இந்த நிலையிலும் அவர் மாணவர்கள் இடையே வந்து நின்று போராட்டக் குரல் கொடுத்திருந்தார். மேற்கு வர்தமான் மாவட்டத்தின் துர்காபூரை சேர்ந்தவருக்கு அருகிலுள்ள ஜமூரியா தொகுதியில் போட்டியிட சிபிஎம் வாய்ப்பளித்துள்ளது.
கடைசியாக கடந்த மக்களவைத் தேர்தலில் முன்னாள் மாணவப் பேரவை தலைவரான கன்னையா குமார், பிஹாரில் போட்டியிட்டிருந்தார். இவரை போலவே, அயிஷியின் அரசியல் பேச்சும் ஜேஎன்யு மாணவர்கள் இடையே மிகவும் பிரபலம்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அய்ஷி கோஷ் கூறும்போது, ‘என்போன்ற மாணவத் தலைவர்கள் மீதான அரசியல் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. 2016 இல் நான் ஜேஎன்யுவில் எம்.ஏ பயில இணைந்த போது அரசியல் எனக்குப் புதிதாக இருந்தது.
அதை அறிந்த பின், நாட்டு மக்களுக்காக ஜேஎன்யுவில் செய்த போராட்டத்தை ஜமூரியாவில் தொடர்வேன். மாணவர்கள் இடையே செய்து வந்த மாற்றத்தினை இனி, பொதுமக்களிடம் கொண்டு வருவேன்.’ எனத் தெரிவித்தார்.
சிபிஎம் கட்சியின் செல்வாக்கானத் தொகுதியாகக் கருதப்படும் ஜமூரியாவின் இந்துக்களில் பெங்காலி, இந்தி பேசுபவர்கள் என இருபிரிவினர் உள்ளனர். அதேபோல், முஸ்லிம்களிலும் இரண்டு மொழி பேசுபவர்கள் உள்ளனர்.
இதனால், முஸ்லிமான ஜெஹன் ஆரா கான் தொடர்ந்து சிபிஎம் கட்சியின் இரண்டாவது முறை எம்எல்ஏவாக உள்ளார். ஆனால், இந்தத் தேர்தலில் ஜமூரியாவில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் பெங்காலி பேசும் இந்துக்கள் வேட்பாளர்கள். தானும் இந்துவாக இருந்தும் இவர்களை வெல்வது அய்ஷி கோஷுக்கு பெரும் சவாலாகிவிட்டது.
நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இந்தத் தொகுதி, மாஃபியாக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையிலான தாக்குதல்களுக்கு பெயர் போனது. எனவே, ஜேஎன்யுவை போலவே அயிஷிக்கு இங்கும் கடுமையாகப் போராட வேண்டிய சூழல் உள்ளது.
போட்டியில் ஜேஎன்யுவின் மற்றொரு மாணவி
ஜேஎன்யுவில் ஆய்வு மாணவியான தீப்சிதா தாருக்கும் மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இவர், சிபிஎம் கட்சி சார்பில் ஹவ்ரா மாவட்டத்தில் பாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரைப் போலவே மேலும் எட்டு மாணவர்கள் சிபிஎம் சார்பில் மேற்கு வங்கத் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர். மூத்த வயதுள்ளவர்களை ஒதுக்கி, இந்தமுறை சிபிஎம் நாற்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்களை களம் இறக்கி உள்ளது.
இவர்கள் மூலம் இளம் வாக்காளர்களை கவரவம் செய்ய சிபிஎம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 27 முதல் தொடங்கி எட்டு கட்டங்களாக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.