

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது
முதல்முறையாக நாட்டின் பிரதமர், அதிபர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ‘குவாட்’ கூட்டணி உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர்ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, “குவாட் அமைப்பு என்பது இந்தியாவின் பாரம்பரியமான வசுதைவா குடும்பகத்தின் நீட்டிப்பு ஆகும். இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மதச்சார்பற்ற தன்மையை ஊக்குவிப்பதற்கும், நிலையான, வளமான பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.
கரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க ஆசைப்படு கிறேன். உலக நன்மைக்காக குவாட் அமைப்பு ஒன்றிணைந்து பாடுபடவேண்டும்" என்றார்.
மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசும்போது, “21-ம் நூற்றாண்டின் தலைவிதியை இந்தோ-பசுபிக் பிராந்தியம் வடிவமைக்கும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பெரிய ஜனநாயக நாடுகளின் 4 தலைவர்கள் என்ற வகையில், எங்கள் கூட்டு ஒப்பந்தம் அமைதி,ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புஆகியவற்றின் செயல்பாட்டாள ராக இருக்கட்டும். இதே பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து இந்த அமைப்பு செயல்படட்டும்” என்றார்.