Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM

மத வழிபாட்டு தலங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது இனி யாரும் உரிமை கோர முடியாது.

இந்த சட்டத்தை எதிர்த்து பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, அரசியல் சாசனத் துக்கு எதிரானது. ஆக்கிர மிப்பாளர்களிடம் இருந்து மத வழிபாட்டுத் தலங்களை மீட்பதை இந்த சட்டம் தடுக்கிறது. ஒரு மத வழிபாட்டுத் தலத்தை மற்றொருவர் பிடித்துக் கொண்டால் அதற்கு மீண்டும் உரிமை கோர முடியவில்லை. இந்த சட்டம் இந்து, ஜெயின், பவுத்தம், சீக்கிய மதத்தினருக்கு எதிராக உள்ளது.

முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன. அந்த வழிபாட்டுத் தலங்களை இதுவரை மீட்க முடியவில்லை. எனவே மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ஐ நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி போபண்ணா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விகாஷ் சிங், சங்கர நாராயணன் ஆஜராகினர்.

அவர்கள் கூறும்போது, "இந்த சட்டத்தில் இருந்து அயோத்தி ராம ஜென்ம பூமிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிருஷ்ணரின் ஜென்ம பூமியான மதுராவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. பகவான் கிருஷ்ணரின் ஜென்ம பூமியை மீட்க இந்துக்கள் நீண்ட காலமாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ள மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும்" என்று வாதிட்டனர்.

இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய கலாச்சார துறைக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.

கிருஷ்ண ஜென்ம பூமி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதே மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியையும் மீட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரின.

இதுதொடர்பாக மதுரா நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை சுட்டிக் காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில்இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதை எதிர்த்தும் இந்து அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x