Published : 13 Mar 2021 03:12 AM
Last Updated : 13 Mar 2021 03:12 AM
மேற்கு வங்க முதல்வர் திரிணமூல் காங்கிரஸ் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியினர் நேற்று புகார் மனு அளித்தனர்.
மேற்கு வங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ள மம்தா பானர்ஜி, அங்கு தனது வேட்பு மனுவை கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார். பின்னர், தமது காருக்கு அவர் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் மம்தாவை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில்பலத்த காயமடைந்த மம்தா தற்போது கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கணுக்கால், தோள் பட்டை உள்ளிட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பெரும் அதிர் லைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் உயர்நிலைக் குழுவினர் நேற்றுநேரில் சென்று புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் தற்செயலானது கிடையாது. மாறாக, இது திட்டமிட்ட சதியாகும். இந்தசதியில் பாஜகவுக்கும், சுவேந்து அதிகாரிக்கும் தொடர்பு உள்ளது.மம்தாவின் உயிருக்கு குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
மம்தா பானர்ஜி நந்திகிராமுக்கு செல்வதற்கு முன்பாகவே, அவர் தாக்கப்படுவது போன்ற கேலிச் சித்திரத்தை மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். இதிலிருந்தே, பாஜகவினரால் அரங்கேற்றப்பட்ட சதிச் செயல் என்பது தெரியவருகிறது. இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மம்தா மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளோம் என்று பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் நேற்று தெரிவித்தார்.
மம்தா டிஸ்சார்ஜ்
எஸ்எஸ்கேஎம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தமம்தா பானர்ஜியின் உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்ட தால் நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காலில் கட்டு போட்டிருந்த மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மருத்துவமனையில் இருந்து காலிகட்டில் உள்ள தனது இல்லத்துக்கு காரில் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT