Last Updated : 29 Nov, 2015 12:22 PM

 

Published : 29 Nov 2015 12:22 PM
Last Updated : 29 Nov 2015 12:22 PM

மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம்: ரூ.12,000 ரூ.15,000 விலையில் மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது

‘பெடல்’ செய்வதன் மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யும் நிலையான மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளருமான மனோஜ் பர்கவா அறிமுகம் செய்துள்ளார்.

இந்த சாதனத்தை பர்கவா நேற்று டெல்லியில் அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசும் போது, “இந்த மிதிவண்டி சாதனத்தில் அமர்ந்து ‘பெடல்’ செய்யும் போது, செயின் மூலம் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் இயங்கி, மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலான இந்த மிதிவண்டி சாதனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சந்தைக்கு வருகிறது” என்றார்.

“ஒரு மணி நேரம் பெடல் செய்தால் போதும், கிராமப்புற குடும்பத்தின் 24 மணி நேர மின்சாரத் தேவை பூர்த்தியாகும். இதில் விளக்குகள், சிறிய மின்விசிறி இயங்கச் செய்வதுடன் ஒரு செல்போனை சார்ஜ் செய்துகொள்ளவும் முடியும். மின்கட்டண ரசீது இல்லை. எரிபொருள் செலவு இல்லை. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை” என்கிறார் பர்கவா.

ஓராண்டுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இது தொடர்பாக பர்கவா பேசியுள்ளார். மேலும் பல்வேறு துறை அதிகாரிகளிடமும் சென்று உற்சாகத்துடன் விளக்கியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த துறை உதவி செய்யும் என்பதை முடிவு செய்வதற்கே 6 மாதங்கள் ஆனதுதான் துரதிருஷ்டம்.

இந்த மிதிவண்டி சாதனம் முதலில் உத்தராகண்ட் மாநிலத்திலும் பிறகு நாட்டின் பிற மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் அமெரிக்காவிலும் இது உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இந்த மிதிவண்டி சாதனத்தில் ஒருவர் பெடல் செய்யும்போது அவரது உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் வகையிலான ஒரு மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. எனவே உடல் பருமனை குறைக்கவும் இந்த சாதனம் பேருதவியாக இருக்கும்.

“உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் மின்சார வசதி கிடைக்காமல் உள்ளனர். இவர்களுக்கு இந்த மிதிவண்டி சாதனம் மிகவும் உதவியாக இருக்கும்” என்கிறார் பர்கவா.

சுமார் ரூ. 27,000 கோடி சொத்துகள் கொண்ட பர்கவா, தனது தொழில் முதலீடுகளில் 99 சதவீதம், மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவே இருக்க வேண்டும் என உறுதிபூண்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய அறக்கட்டளைகளில் ஒன்றான தி ஹாண்ஸ் புவுன்டேஷனுக்கு பர்கவா ஆதரவளித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x