

கேரளத்தில் தேர்தல் நடத்தை விதிகளை முதல்வர் பினராயி விஜயன் மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்கா ராம் மீனாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முதல்வர் பினராயி விஜயன் கடந்த மார்ச் 4 மற்றும் 6-ம் தேதியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசின் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அவர் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தலைமைச் செயலாளர் அல்லது மக்கள் தொடர்புத் துறை மட்டுமே அரசின் கொள்கைகளை அறிவிக்க முடியும்.
என்றாலும் வாக்காளர்களை கவர்வதற்காக தேர்தல் நடத்தைவிதிகளை மீறி, புதிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். இத்தகைய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவதை தடுக்கவேண்டும். வழக்கமான அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால், அதை தலைமைச் செயலாளர் வெளியிட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரமேஷ் சென்னிதலா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.