

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர்கோயில் கட்டும் பணி தொடங்கியபிறகு அந்த நகரம் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதனால் அங்கு செல்லும் தங்கள் பகுதி பக்தர்களுக்காக மாநில அரசுகள் விடுதிகள் கட்ட விரும்புகின்றன. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் உ.பி. அரசிடம் நிலம் கேட்டு எழுதியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுபோல் நாட்டின் முக்கியஇந்துக் கோயில்களும் அயோத்தியில் நிலம் பெற்று விருந்தினர் இல்லங்கள் அமைக்க விரும்புகின்றன. திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜம்மு வைஷ்ணதேவி கோயில் நிர்வாகம் மற்றும்மதுரை மீனாட்சி அம்மன் கோயில்நிர்வாகம் சார்பில் நிலத்துக்குவிருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சர்வதேச நாடுகளும் அங்கு மடாலயங்கள் கட்டிக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன. நேபாளம், மியான்மர், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இதுபோன்ற கோரிக்கையை ஏற்கும் வகையில் அனைத்து பிரிவினருக்கும் குறிப்பிட்ட அளவு நிலம் ஒதுக்கப்பட உள்ளது. அயோத்தியை ஒட்டியுள்ள 1,194 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் இவர்களுக்கு நிலம் ஒதுக்கித் தர உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். மாநில அரசின் அயோத்திவளர்ச்சிக் கழகத்திடம் இப்பணி ஒப்படைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளிதழிடம் உ.பி. அரசின் மூத்தஅதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, ‘இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. ’கிராண்ட் அயோத்யா’ எனும்பெயரிலான இந்த வளர்ச்சித் திட்டத்துக்கான வரைபடம் தயாரிக்க, தனியார் பெரு நிறுவனங்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த நிலம் இலவசமாக அல்லாமல் குறைந்த தொகையில் வழங்கப்பட உள்ளது” என்றனர்.
நம் நாட்டில் பவுத்த புனிதத்தலங்கள் உள்ள நகரங்களில் மட்டுமே சர்வதேச நாடுகளின் மடாலயங்கள் உள்ளன. பிஹாரின்புத்த கயா, உ.பி.யின் மெயின்புரி உள்ளிட்ட நகரங்களில் இவைஉள்ளன. இதுபோல் அயோத்தியில் முதன்முறையாக அமைய உள்ளன. மேலும் மாநில அரசுகள் மற்றும் முக்கியக் கோயில்கள் சார்பிலும் விருந்தினர் இல்லங்கள் அமைகின்றன. இதனால் அயோத்தி நகரம் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட புனித தலமாக அமைந்து வருகிறது.