

‘‘இந்தியா அமைதியை தான் விரும்புகிறது. அதே சமயம் நட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்றால் முழு ராணுவ பலத்தை பயன்படுத்தவும் தயங்காது’’ என்று பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஹஸிமராவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் போர் படை பிரிவுகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்று, போர் மற்றும் அமைதி காலங்களில் இந்திய வான் எல்லைகளை சிறப்பாக பாதுகாத்த விமானப்படையின் 22வது மற்றும் 18வது பிரிவுகளை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் தரச் சான்றிதழை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரணாப் முகர்ஜி, ‘‘இந்தியா அமைதியில் மட்டுமே முழு நம்பிக்கை வைத்துள்ளது. அதே சமயம் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து என்றால் முழு ராணுவ பலத்தையும் பயன்படுத்த தயங்காது. எனவே முப்படை வீரர்களும் வீராங்கனைகளும் எப்போதும் தேசத்தை காக்கும் பணியில் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.
பூகம்பத்தால் பாதிப்படைந்த நோபளம் மற்றும் மழை வெள்ளத் தால் உருக்குலைந்த உத்தராகண்ட் மாநிலத்தில் துரிதமான மீட்பு பணிகளை மேற்கொண்டதற்காக, விமானப் படை வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக விமானம் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ‘சூர்ய கிரண்’, ‘சுகோய் 30’ மற்றும் ‘மிக்-27’ ரக போர் விமானங்கள் மூலம் வானில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்பட்டன.