Published : 11 Mar 2021 02:55 PM
Last Updated : 11 Mar 2021 02:55 PM

‘‘அனுதாபம் தேடும் அரசியல் நாடகம், போலீஸே இல்லை என கூறுவதை கேட்டால் சிரிப்பு வருகிறது’’- மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கண்டனம்

தாக்குதல் நடந்ததாக கூறி மக்களிடம் அனுதாபம் தேட முதல்வர் மம்தா பானர்ஜி முயலுகிறார். அந்நேரத்தில் போலீஸே இல்லை என மம்தா பானர்ஜி கூறுவதை கேட்டால் சிரிக்கதான் தோன்றுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், இரண்டாம்கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறுகிறது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் செய்தபின்னர் காரில் ஏற முயன்றபோது மம்தா பானர்ஜி கீழே விழுந்தார். 4 பேர் அவரை கீழே தள்ளி விட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். மேலும் அப்போது காவலர்கள் யாரும் அங்கு இல்லை எனவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபஜித் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த மாநில பாஜக துணைத் தலைவர் பிரதாப் பானர்ஜி கூறுகையில் ‘‘ தாக்குதல் நடந்ததாக கூறி தவறான தகவல்களை மம்தா பானர்ஜியும், திரிணமூல் காங்கிரஸும் பரப்பி வருகிறது. இதுதொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும்.’’ எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜியை விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:

சதித்திட்டம் இருந்தால் என்ஐ, சிஐடி, சிறப்பு புலானாய்வு குழு எதையாவது வைத்து விசாரணை நடத்த வேண்டியது தானே. பொது மக்களிடம் அனுதாபம் பெற வேண்டும் என்பதற்காக இப்படியா நடந்து கொள்வது. அந்த சமயத்தில் போலீஸ் இல்லை என அவர் கூறுகிறார். சிசிடி கேமரா காட்சிகளை பார்த்தால் உண்மை தெரிந்து விடப்போகிறது.

தாக்குதல் நடந்ததாக கூறி மக்களிடம் அனுதாபம் தேட முதல்வர் மம்தா பானர்ஜி முயலுகிறார். தாக்குதல் முயற்சி, சதி திட்டம், கொலை முயற்சி இது எல்லாமே தோல்வியின் வெளிப்பாட்டை காட்டுகிறது. அந்நேரத்தில் போலீஸே இல்லை என மம்தா பானர்ஜி கூறுவதை கேட்டால் சிரிக்கதான் தோன்றுகிறது. தேர்தல் வெற்றி பெற முடியாத நிலையில் அதனை மறைக்கவே இதுபோன்ற நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x