பாஜகவில் இணைகிறேனா?- காங்கிரஸிலிருந்து விலகிய பி.சி.சாக்கோ பதில்

பாஜகவில் இணைகிறேனா?- காங்கிரஸிலிருந்து விலகிய பி.சி.சாக்கோ பதில்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பி.சி.சாக்கோ அக்கட்சியிலிருந்து விலகினார். கேரளா வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் சாக்கோவின் விலகல் அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சாக்கோ, "கேரளா சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்தச் சூழலில் கட்சியைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையிலேயே நான் கட்சியிலிருந்து விலகுகிறேன்.

நான் கட்சியிலிருந்தது எந்த பொறுப்புக்காகவும் அல்ல. எனக்கு கட்சிப் பணி மனநிறைவு தருவதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயகக் கட்சியில் இருப்பது எனக்கு அத்தகைய மனநிறைவைத் தந்தது. எனது கருத்துகளுக்கு செவிசாய்க்கப்படும்போது கட்சி முடிவுகளில் அனைவரின் ஆலோசனையும் கேட்கப்படும்போது மனநிறைவு ஏற்பட்டது.

ஆனால், இப்போது அப்படியல்ல. கேரளாவில் காங்கிரஸ் கட்சியே இல்லை. காங்கிரஸ் ஏ டீம், காங்கிரஸ் பி டீம் என்று இரண்டு அணிகள் மட்டுமே உள்ளன. கட்சியில் எப்போது ஜனநாயகம் இல்லாமல் போகிறதோ அப்போது வெளியேறவேண்டிய தருணம் அமைந்துவிடுகிறது. 40 ஆண்டுகால காங்கிரஸுடனான பயணத்தை முடித்துக் கொள்வதில் இதைவிட சரியான காரணம் இருக்க முடியாது.

அதேவேளையில் நான் பாஜகவில் இணையலாம் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. என்னால் ஒருபோதும் மதச்சாயல் கொண்ட கட்சியில் இணைய முடியாது. நான் காங்கிரஸ்காரணாக இருந்ததற்கே கட்சியின் மதச்சார்பின்மைதான் காரணம்.

கேரள காங்கிரஸை சீர்படுத்த கட்சி மேலிடம் முடிவு செய்ய வேண்டும். கேரளாவில் தொகுதிகளுக்குள் பிளவு ஏற்படுத்தி ஏ அணி, பி அணி இருவரும் தனித்தனியாக இயங்குகின்றனர். உட்கட்சிப் பிரச்சினையில் தேர்தல் வெற்றி யாருடைய கவனத்திலும் இல்லை" என்றார்.

கேரள காங்கிரஸ் நிலவரம் குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து முறையிட்டேன். அவர்கள் தலையிட்டும் மாநிலத்தில் கட்சிக்குள் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

அண்மையில் பி.சி.சாக்கோ இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியில் மாநிலத்தில் பாஜக வளர்ச்சி குறித்துப் பேசியிருந்தார். அப்போது அவர், "கடந்த 70 ஆண்டுகளாக கேரளத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலாக ஒரு எம்எல்ஏவை பெற்றனர். காங்கிரஸின் சில தோல்வியால் தான் அதுவும் நடந்தது. கேரளத்தில் பாஜகவை ஆளும் திறனுடைய கட்சியாக மக்கள் அணுகவில்லை. இந்துக்களில் சிறு பகுதியினரே அக்கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் அதிகபட்சம் 15 சதவீதம் மட்டுமே. ஆட்சிக்குவர 25 முதல் 30 சதவீதம் வரை வாக்கு வங்கி தேவை" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in