Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM

பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க ஆயுதம் ஏந்திய 30 ட்ரோன்களை அமெரிக்காவிடம் வாங்க திட்டம்

புதுடெல்லி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி நடந்து கொ ள்வதுடன், தீவிரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. இதுபோல, சீனாவும் லடாக், அருணாச்சல பிரதேச எல்லைகளில் அவ்வப்போது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் இந்த நாடுகளின் சதி செயல்களை கண்காணிப்பதுடன், போர் ஏற்பட்டால் அதை சமாளிக்கவும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் சாண்டியாகோவைச் சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 30 எம்க்யூ-9பி பிரடேட்டர் ட்ரோன்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.21,900 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்துக்கு அடுத்த மாதம் ஒப்புதல் வழங்கப்படும் என மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய ராணுவத்தின் போரிடும் திறன் அதிகரிக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்க்யூ-9பி ரக ட்ரோன்கள் 1,700 கிலோ எடையுள்ள ஆயுதங்களை சுமந்தபடி 48 மணி நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது. இந்த ட்ரோன்கள் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் சீனாவின் போர்க்கப்பல்களை இந்தியகடற்படை கண்காணிக்க உறுதுணையாக இருக்கும். இமயமலைப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லையை கண்காணிக்கவும் இவை உதவும் என கூறப்படுகிறது.

இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்காக, அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகளில் ரூ.18.25 லட்சம் கோடி செலவில் ராணுவத்தை நவீன மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x