

இந்தியாவில் பொது இடங்களில்புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும்,விமான நிலையங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றஇடங்களில் புகைப்பிடிப்பதற் கென்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
அத்தகையப் பகுதிகளையும் நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவு விடுதி உரிமையாளர்கள் அடங்கிய குழு ஒன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
புகைப்பிடிப்பதை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் உலக அளவில் ஓவ்வொரு வருடம் மார்ச் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை ‘புகைப்பதைத் தவிர்ப்போம் தின’மாக கொண்டாடப்படுகிறது. அத்தினத்தை முன்னிட்டு இந்த வேண்டுகோளை அக்குழு வைத்துள்ளது.
இதுதொடர்பாக டாடா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் பங்கஜ் சதுர்வேதி கூறும்போது, ‘புகைப்பிடிக்காதவர்களைவிட புகைப்பிடிக்கும் பழக்கும் இருப்பவர்களுக்கு கரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகைப்பிடிப்பது நுரையீரலின் செயல்பாட்டையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடுகிறது. புகைப்பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
எனவே உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் புகைப்பிடிப்பதற்கென்று ஒதுக்கப்பட்டு இருக்கும் பகுதியை நீக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
புகையிலைப் பயன்பாட்டில் உலகில் இரண்டாவது இடத்தில்இந்தியா இருக்கிறது. இந்தியஇளைஞர்களில் 28 சதவீதம் இளைஞர்கள் புகைப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேர் புகையிலை சார்ந்த பொருள்களை பயன்படுத்துவோர் என்பது குறிப்பிடத்தக்கது.