

பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி நேற்று திருப்பதி வந்திருந்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் கிறிஸ்தவ மதம் குறித்து பிரச் சாரம் செய்வதாக பிரபல தெலுங்கு ஊடகத்தில் செய்தி வெளியானது. இது தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் சார்பில் ஆஜராவதற்காக சுப்பிரமணியன் சுவாமி நேற்று திருப்பதி வந்திருந் தார். ஆனால், இங்கு மாநகராட்சி தேர்தல் நடைபெற்று வருவதால், நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், இந்த வழக்கில் சுவாமி இன்று ஆஜராக உள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.
அப்போது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:
ஒரு தேசிய கட்சி, மாநில கட்சிகளிடம் 5 அல்லது 10, 20 சீட்டுகளுக்காக கெஞ்சுவது எனக்கு பிடிக்கவில்லை. பாஜக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி யிட்டிருக்க வேண்டும். நான் தமிழக தேர்தல் குறித்து இதுவரை எந்தவித ஆர்வமும் காட்ட வில்லை.
பாஜக 2 அல்லது 3 தொகுதிகளில் வெற்றி பெறலாம். அல்லது அதுகூட கிடைக்காமல் போகலாம். சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது. நான் கூறியதுபோல் ரஜினி அரசியலுக்கு வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். கமல் குறித்து கேள்வி எழுப்பிய போது, “கமல் யார் ? அவரும் அரசியலுக்கு வந்து விட்டாரா?" என கிண்டலாக பதிலளித்தார்.