

கர்நாடக அரசு திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பினர் நேற்று மாநிலம் முழு வதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். மங்களூரு, சித்ரதுர்கா, சிக்மகளூரு உள்ளிட்ட மாவட்டங் களில் கல் வீசி தாக்குதல் நடத்தப் பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
‘மைசூரு புலி' திப்பு சுல்தானின் பிறந்த நாளை கர்நாடக அரசு `திப்பு சுல்தான் ஜெயந்தி' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடியது. இதற்கு பாஜக, ஆர் எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே நடந்த கண்டன பேரணியின் போது, வன்முறை வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மாநில அரசை கண்டித்து நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்துத்துவா அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதற்கு கர்நாடக மாநில பாஜக ஆதரவு தெரிவித்து, ஆங்காங்கே போராட் டத்திலும் பங்கேற்றது. இதனால் குடகு, மங்களூரு, சிக்மகளூரு, ஹூப்ளி உள்ளிட்ட பதற்றமான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்துத்துவா அமைப்பின் முழு அடைப்பை தொடர்ந்து மங்களூரு, உடுப்பி, சிக்மகளூரு, சித்ரதுர்கா, ஹூப்ளி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இங்கு சாலைகளில் திரண்ட நூற்றுக்கணக்கான இந்துத்துவா அமைப்பினர் மறியலில் ஈடுபட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பண்டுவால்,சுள்ளியா ஆகிய பகுதிகளில் கல்வீசி தாக்கு தல் நடத்தப்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும் சாம்ராஜ்நகர், துமகூரு, புத்தூர் ஆகிய இடங்களில் பேருந்து களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டனர். பாகல் கோட்டை யில் சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.இதே போல சிக்மகளூருவில் அனுமதியின்றி பேரணி நடத்திய முன்னாள் பாஜக அமைச்சர் சி.டி.ரவி உட்பட 120 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பெங்களூரு, மைசூரு மற்றும் வட கர்நாடகாவில் இந்துத்துவா அமைப்பினரின் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
திப்பு சுல்தான் ஜெயந்தியை கண்டித்து இந்துத்துவா அமைப் பினரின் போராட்டம் தொடர்வதால் மங்களூரு, உடுப்பி, ஹூப்ளி உள் ளிட்ட இடங்களில் பதற்றம் நிலவு கிறது. இதனால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்புக்கு போலீஸார் குவிக் கப்பட்டுள்ளனர்.