

மோடி அரசின் ஆட்சி இருக்கும் வரை போராடத் தயாராக உள்ளோம் என்று விவசாயிகள் தலைவர் நரேந்திர திகைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அமைதியாக நடந்த இந்தத் தொடர் போராட்டத்தில், குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் அத்துமீறி ஏற்றப்பட்ட சீக்கியர்களின் மதக்கொடியால் அப்போராட்டம் திசை திரும்புவதாகக் கருதி விவசாயிகள் பலரும் வீடு திரும்பத் தொடங்கினர். பாரதிய கிசான் சங்கத்தின் (பிகேயூ) தலைவரான ராகேஷ் திகைத் வேண்டுகோள் விடுத்தததை அடுத்து, போராட்டம் 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிகேயூவின் தலைவரான ராகேஷ் திகைத்தின் இளைய சகோதரர் நரேந்திர திகைத். 45 வயதான இவர் டெல்லி போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் முஸாஃபர் நகரில் இருந்து குடும்பத்தின் விவசாயப் பணிகளைக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
''கடந்த காலத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான விவசாயப் போராட்டங்களைப் பல்வேறு சூழ்ச்சிகளைக் கையாண்டு மத்திய அரசு கலைத்தது. ஆனால், இந்தப் போராட்டத்தை அப்படிச் செய்ய முடியாது. அரசு என்ன செய்தாலும் நாங்கள் கலைய மாட்டோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், போராட்டம் தொடரும். இந்த அரசுக்கு 3.5 ஆண்டுகள் ஆட்சிக் காலம் மீதம் உள்ளது. மோடி அரசின் ஆட்சி இருக்கும் வரை போராடத் தயாராக உள்ளோம்.
நான் இங்கிருந்தாலும் என் எண்ணமெல்லாம் போராட்டத்தில்தான் இருக்கிறது. அடிக்கடி காஸிபூர் எல்லைக்குச் சென்று போராட்டக் களத்தைப் பார்க்கிறேன். விவசாயிகள் எழுச்சியுடன் போராடுகின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே பயிர்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்று தொடர்ந்து சொல்லும் அரசால், அந்த உறுதியை ஏன் எழுத்து வடிவத்தில் தர முடியவில்லை? காஸ் சிலிண்டர்களுக்கு மானியம் தருவதாகச் சொன்னவர்கள் அதை நிறுத்தி விட்டார்களே? வேளாண் பயிர்களைச் சேமித்து அதை விரும்பும் விலையில் பின்னாட்களில் விற்க விரும்புகின்றனர். வேளாண் சட்டங்கள் இதை நோக்கியே அமைந்துள்ளன.
பணத்துக்காகத்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. என் குடும்பத்தினர் ஒருவர் மீதாவது ஒற்றைத் தவறு நிரூபிக்கப்பட்டால் நாங்கள் டெல்லியில் இருந்து திரும்பி விடுகிறோம்''.
இவ்வாறு நரேந்திர திகைத் தெரிவித்தார்.