

நகரங்களைப் பெயர் மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரத்தை சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றும் நடவடிக்கைகளில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது. அவுரங்காபாத் மாநகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக அந்த நகரத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று சிவசேனா நினைக்கிறது. இதனால், மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் தோழமைக் கட்சிகளான சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காகப் பழைய கோரிக்கைகளை சிவசேனா கைவிட்டுவிட்டதாக பாஜகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். பாஜக எம்எல்ஏ யோகேஷ் சாகருக்கு அவர் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், ''நகரங்களைப் பெயர் மாற்றும் விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. மாநில அரசுகளுக்கு இல்லை.
அவுரங்காபாத் நகரத்தை சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றும் கோரிக்கையைக் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி, பிராந்திய ஆணையர் அனுப்பி இருந்தார். இதன் மீதான சட்டப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் நீதித்துறையின் கருத்து கோரப்பட்டுள்ளது. அனைத்து ஒப்புதல்களும் பெறப்பட்ட பின்னர், அவுரங்காபாத் ஆணையரின் கோரிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும்'' என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வருவாய், வன மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகள் கடந்த 1995-ம் ஆண்டு அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டன. அதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.