

உத்தரகாண்டின் அடுத்த முதல்வராகிறார் தீரத் சிங் ராவத். டேராடூனில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை, அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக அம்மாநில எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் தீரத் சிங் ராவத்தை முதல்வராக்குவது என முடிவு செய்யப்பட்டது. உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், உத்தரகாண்டின் அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு பதவிப் பிரமாணம் நடைபெறுகிறது.
உத்தரகாண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக தலைவா்கள் சிலா் அதிருப்தி அடைந்துள்ளனா். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிா்கொள்வது சிறப்பாக இருக்காது என அவர்கள் கூறி வந்தனர்.
இதனையடுத்து டெல்லியில் தேசியத் தலைவர் நட்டாவுடனான சந்திப்புக்குப் பின் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அடுத்த முதல்வர் யாரென்பது குறித்து இன்று அம்மாநில எம்எல்ஏக்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். ஹரித்வார் எம்.பி., ரமேஷ் பொக்ரியால், நயினிடால் எம்.பி. அஜய் பட், மாநில சுற்றுலா அமைச்சர் சத்பால் மஹாராஜ், ராஜ்யச்பா எம்.பி. அனில் பலூனி, உயர் கல்வி அமைச்சர் தன்சிங் ராவத் ஆகியோர் முதல்வர் பட்டியலில் இருந்தனர்.
இந்நிலையில், உத்தரகாண்டின் அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
56 வயதான தீரத் சிங் ராவத் பாஜக எம்.பி.யாக இருந்தவர். இவர், கடந்த 2013 முதல் 2015 வரை உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவராக இருந்தவர்.
முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள தீரத் நாத் ராவத், "என்னை முதல்வராகத் தேர்வு செய்த பிரதமர், உள்துறை அமைச்சருக்கு நன்றி. ஒரு குக்கிராமத்திலிருந்து சாதாரண தொண்டனாக இருந்த நான் இன்று இவ்வளவு பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளேன். நான் இதனை கனவிலும் நினைத்ததில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்" எனத் தெரிவித்தார்.