Published : 10 Mar 2021 03:11 am

Updated : 10 Mar 2021 07:16 am

 

Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 07:16 AM

இடதுசாரிகள் முரண்பாடுகளின் மூட்டை; கேரளாவில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது: காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ பேட்டி

pc-chacko-interview
பி.சி.சாக்கோ

திருவனந்தபுரம்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதன் எதிரொலியாக காங்கிரஸ் கட்சியினர் கோஷ்டிகளை மறந்து கைகோத்துள்ளனர். இந்நிலையில் கேரளாவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.சி.சாக்கோ, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கேரளாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?


கேரளத்தைப் பொறுத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும். தற்போதைய இடதுசாரி அரசு தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இடதுசாரி அரசு சில சாதனைகளை செய்திருந்தாலும், ஊழல் அதையெல்லாம் முந்திவிட்டது. முதல்வர்அலுவலகம் தொடங்கி அமைச்சர்கள் வரை பலரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். மீண்டும் ஆட்சிக்கு வரும் அளவுக்கு நற்பெயரை அவர்கள் பெறவில்லை.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரதானமாக எதை முன்வைக்க உள்ளது?

இடதுசாரி அரசில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம்நியமனங்களே நடக்கவில்லை. மாறாக, அரசுக்கு ஆதரவானவர்கள் மற்றும் இடதுசாரி இயக்கத்தினர் மட்டுமே தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தேர்வாணையத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தவர்களுக்கே வேலை வழங்கவில்லை. மக்கள் மவுனப் புரட்சிக்கு தயாராகிவிட்டனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டக்களத்தில் உள்ளனர். இடதுசாரிகள் சர்வாதிகாரப் போக்குகொண்டவர்கள். அவர்களுடன் கூட்டணியில் இருப்பவர்களேஅதை பலமுறை உணர்ந்திருப்பார்கள். இடதுசாரிகள் முரண்பாடுகளின் மூட்டை. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். ஆட்சிக்கு வரும்போது வளர்ச்சியின் வாக்காளர்களாக மாறிவிடுகிறார்கள். மாநிலத்தின் உண்மையான வளர்ச்சியில் இடதுசாரிகளுக்கு நம்பிக்கை இருப்பதாக மக்கள் நம்பவில்லை. இதைத்தான் மக்கள் மத்தியிலும் முன்வைக்க உள்ளோம்.

கேரளத்தில் பாஜக வளர்ந்துள்ளதுபோல் தெரிகிறதே?

கடந்த 70 ஆண்டுகளாக கேரளத்தில் அவர்களால் காலூன்ற முடியவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன்முதலாக ஒரு எம்எல்ஏவை பெற்றனர். காங்கிரஸின் சில தோல்வியால் தான் அதுவும் நடந்தது. கேரளத்தில் பாஜகவை ஆளும் திறனுடைய கட்சியாக மக்கள் அணுகவில்லை. இந்துக்களில் சிறு பகுதியினரே அக்கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் அதிகபட்சம் 15 சதவீதம் மட்டுமே. ஆட்சிக்குவர 25 முதல் 30 சதவீதம் வரை வாக்கு வங்கி தேவை.

கேரளத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை இந்து சமூகமாகஈழவர் சமூகம் உள்ளது. அவர்களுக்கென எஸ்என்டிபி என்னும் அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பின் இப்போதைய தலைவரைத் தவிர்த்து, பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியையே ஆதரித்து வந்துள்ளனர். இதேபோல் நாயர் சமூக அமைப்பான நாயர் சர்வீஸ் சொசைட்டியில் இருக்கும் பலரும் காங்கிரஸில் தலைவர்கள்தான். மதச்சார்பற்ற எங்கள் அணுகுமுறை கிறிஸ்தவ, இஸ்லாமியர்களிடமும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் சேர்த்து மதிப்பிடும்போது உங்களுக்கே பாஜகவின் பலம் தெரியும்.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் சில கிறிஸ்தவ அமைப்புகள்கூட கேரள பாஜகவை ஆதரிக்கின்றனவே?

கேரளத்தில் ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுக்குப் பின் மரபுவழி கிறிஸ்தவர்கள் அதிகம். அவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட், பாஜகவை விடகாங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கத்தில் உள்ளனர். இரண்டு கிறிஸ்தவக் குழுக்களுக்கு இடையே மோதல் வெடிக்கிறது. அப்போது பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இருவரும் சந்தோஷத்துடன் அவரைப் போய் பார்த்து வந்தனர். இதனால் ஒரு பிரிவினர் ஆதரிப்பார்கள் என பாஜக ஆழமாக நம்புகிறது. கேரளத்தைப் பொறுத்தவரை பாஜக தங்களுக்கு எதிரானது என்பதில் சிறுபான்மையினர் உறுதியாக உள்ளனர்.

மெட்ரோமேன் ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஸ்ரீதரன் மதச்சார்பற்ற மனிதர். அவர் வகுப்புவாத அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கமாட்டார் என நம்புகிறேன். அவர் ஏதோ சோதனையால் அங்கு போயிருக்கக்கூடும்.

கேரளத்தில் கம்யூனிஸ்ட்களை எதிர்த்துவிட்டு தமிழகம், மேற்கு வங்கத்தில் கூட்டணியில் இருப்பது முரணாக இல்லையா?

இந்திய அளவில் பாஜகவை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிதான். அதனால்தான் பொது எதிரியை வீழ்த்த தமிழகம், மேற்கு வங்கத்தில் ஒரு கூட்டணியில் இணைந்துள்ளோம். கேரளத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதானமாக உள்ளன. அதனால் இங்கே ஒருவரை, ஒருவர் எதிர்த்து அரசியல் செய்கிறோம்.

அகில இந்திய காங்கிரஸுக்கு தலைவர் இல்லாதது காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தாதா?

பலமான தலைமை இல்லாததால் நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமடைகிறது. முழுநேரத் தலைவர் இல்லாததே இதற்குக் காரணம். ராகுல் உடனே கட்சிக்கு தலைமை ஏற்காவிட்டால் அது கட்சிக்கு மேலும் துரதிஷ்டமான சூழலை உருவாக்கிவிடும்.


இடதுசாரிகள்பாஜககாங்கிரஸ் மூத்த தலைவர்பி.சி.சாக்கோ பேட்டிPc chacko interview

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x