

நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் 26-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் கூட்டம், அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது நவம்பர் 26ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடரை கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதேசமயம் தாத்ரி மாட்டிறைச்சி கொலை, எழுத்தாளர் கல்புர்கி படுகொலை, எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்து வரும் விவகாரம், பிஹார் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில், எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினை எழுப்ப காத்திருக்கின்றன. இதனால், மழைக்கால கூட்டத் தொடரை போலவே குளிர்கால கூட்டத் தொடரும் கடுமையாக ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. -