Published : 18 Jun 2014 08:11 AM
Last Updated : 18 Jun 2014 08:11 AM

ரயில் கட்டணம் உயர்கிறது: அமைச்சர் சூசக தகவல்

பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணங்களை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே துறைக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஆனால் டீசல் விலை உயர்வை பொறுத்து கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் மாதம் முதல், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தேர்தல் முடிவுகள் கடந்த மே 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு மே 20 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

கட்டண உயர்வு குறித்து புதிய அரசு முடிவு செய்யும் என அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இந்நிலையில் மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசில் கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னர் தனது சொந்த மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என மறைமுகமாகத் தெரிவித்தார்.

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாததால் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டிலோ அல்லது அதற்கு முன்போ ரயில் கட்டணம் உயர்த்தப்படுவது நிச்சயம். எதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ரயில் கட்டணத்தை எந்த அளவு உயர்த்தலாம் என்பது குறித்து மட்டுமே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என ரயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

இதனிடையே நிதியமைச்சர் அருண் ஜேட்லியை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். பின்னர் கவுடா நிருபர்களிடம் பேசுகையில், “ரயில் கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x