‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி கூறிய கருத்தால் நில மசோதா மீதான கூட்டுக்குழு கூட்டத்தில் சர்ச்சை

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி கூறிய கருத்தால் நில மசோதா மீதான கூட்டுக்குழு கூட்டத்தில் சர்ச்சை
Updated on
2 min read

கடந்த ஆகஸ்ட் இறுதியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நிலமசோதா மீது பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்தால் தற்போது சர்ச்சை கிளம்பி உள்ளது. நில மசோதாவுக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தபோது, அதில் கடுமையான விவாதம் நடைபெற்று, அலுவல் முடங்கியதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிகழ்ச்சியில் பேசிய மோடி, நில மசோதா மீதான அவசர சட்டத்தை மீண்டும் பிரகடனம் செய்யப்போவதில்லை என்றார். இது பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அவர் கூறியதாகக் கருதப்பட்டது. இதனால் நில மசோதா மீது இரண்டாவது முறையாக பிரகடனம் செய்யப்பட்ட அவசர சட்டம் ஆகஸ்ட் 31-ம் தேதி காலாவதியானது. இந்நிலையில் நில மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டனர்.

“நில மசோதா மீதான அவசர சட்டம் மறுபிரகடனம் செய்யப் போவதில்லை எனில், அதை கைவிடுவதாகத் தானே அர்த்தம். எனவே அதன் மீதான இருஅவை களின் கூட்டுக்குழு, நாடாளுமன்றத் தில் அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை” என்று கருதி யுள்ளனர்.

‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு பிறகு நேற்று முன்தினம் முதல்முறையாக கூடிய நாடாளுமன்றக் குழு கூட் டத்தில் இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அக்குழுவின் உறுப்பினர்களான எதிர்கட்சி எம்.பி.க்கள் கூறும்போது, “நில மசோதா மீது பிரதமரின் கருத்து தொடர்பாக அவரை கூட்டுக்குழு கூட்டத்தில் அழைத்து அரசின் உண்மை நிலையை கேட்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதற்கு பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதில் உ.பி.யின் பாஜக எம்.பி. ஒருவர், ‘பிரதமர் வெளியில் பேசியதை விடுத்து நாடாளுமன்றத் தில் கூறியதை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றார். அப்படி யானால், பிரதமர் நாடாளுமன்றத் தில் ஒன்று, வெளியில் மற்றொன்று எனப் பேசுவது தவறு. இந்த பிரச் சினையை நாங்கள் குளிர்காலக் கூட்டத் தொடரிலும் எழுப்ப இருக்கிறோம்” என்றனர்.

நில மசோதா மீதான கூட்டுக்குழு தனது அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நவம்பர் 26-ம் தேதி தாக்கல் செய்வ தாக இருந்தது. ஆனால் பிரதமரின் கருத்து தொடர்பாக நேற்று முன் தினம் அதன் கூட்டத்தில் கிளம்பிய சர்ச்சை காரணமாக அதன் அலுவல் எதுவும் நடைபெறவில்லை. எனவே அறிக்கை தாக்கல் செய்ய குழுவின் தலைவரான எஸ்எஸ்.அலுவாலியா கூடுதல் அவகாசம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நில மசோதாவின் பின்னணி

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2013-ல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தற்போதைய அரசு செய்துள்ள திருத்தங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங் களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் அங்கு நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து இரு அவை உறுப்பினர்களை கொண்ட கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in