

உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக தலைவா்கள் சிலா் அதிருப்தி அடைந்துள்ளனா். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிா்கொள்வது சிறப்பாக இருக்காது என அவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் மாநில பாஜக நிர்வாகிகள் சிலர் பாஜக தேசிய நிர்வாகிகளான பொதுச் செயலா் துஷ்யந்த் சிங் கெளதம், துணை தலைவா் ரமண் சிங் ஆகியோா் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அதனைத்தொடா்ந்து அவா்கள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டாவிடம் தங்கள் அறிக்கையை சமா்ப்பித்தனா்.
இந்த சூழலில் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்களை திரிவேந்திர சிங் ராவத் நேற்று நேரில் சந்தித்தாா். இந்த பரப்பான சூழலில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் ராணி மவுரியாவிடம் அளித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அங்குள்ள 70 தொகுதிகளில், பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் கடந்த 2017ம்ஆண்டு மார்ச் 18ந்தேதி பதவியேற்றார்.