Published : 09 Mar 2021 08:52 AM
Last Updated : 09 Mar 2021 08:52 AM

தங்கக் கடத்தல் வழக்கு: 7 கேள்விகள் கேட்ட அமித் ஷா; எதிர்கேள்வி எழுப்பிய பினராயி விஜயன்

தங்கக் கடத்தல், டாலர் வழக்கு தொடர்பாக 7 கேள்விகளை முன்வைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர் கேள்விகளை எழுப்பியுள்ளார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். கேரள மாநில கண்ணூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார் பினராயி விஜயன்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், "அமித் ஷா கேரள மாநிலத்தை அவமானப்படுத்திவிட்டார். கேரள மாநிலம் ஊழலின் பூமி என்று அவர் கூறியுள்லார். ஆனால், இந்தியாவிலெயே கேரளாவில் தான் ஊழல் குறைவு என பல்வேறு அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன.

நான் கேட்கிறேன், தங்கக் கடத்தல் வழக்கில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த நன்கு அறியப்பட்ட நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபர் எனத் தெரியாதா? தங்கக் கடத்தலைத் தடுப்பதில் சுங்கத் துறைக்குதான் முக்கிய பங்கு இருக்கிறது என்பது தெரியாதா? திருவனந்தபுரம் விமான நிலையம் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அப்படியிருக்க பாஜக ஆட்சிக்குப் பின் அந்த விமானநிலையம் தங்கக் கடத்தலின் கூடாரம் ஆனது எப்படி?

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சங் பரிவார் சார்பு கொண்ட அதிகாரிகள் வேண்டுமென்றே பல்வேறு உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டனரா இல்லயா? புலன் விசாரணையில் உங்களின் ஆட்கள் மீது விரல்கள் திரும்பியபோது விசாரணையும் திசை மாறிவிட்டது ஏன்? விசாரணை அதிகாரிகளை இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்தது ஏன்? தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வரின் பெயரைக் குறிப்பிட அழுத்தம் தரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் பேசியதாக ஓர் ஆடியோ கிளிப் கசிந்தது. அது பற்றி அமித் ஷா அறிவாரா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அமித் ஷா பதிலளிக்க வேண்டும்" என்றார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டியே பாஜக இத்தகைய மலிவான அரசியலைச் செய்வதாகவும் பினராயி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

முன்னதாக அமித் ஷா திருவனந்தபுர பிரச்சாரக் கூட்டத்தில், 1. டாலர், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் தங்களின் அலுவலகத்தில் தங்களுக்கு கீழ் வேலை பார்த்தார்களா இல்லையா?
2. தங்களின் அரசாங்கம் அவர்களுக்கு மாதம் ரூ.3 லட்சம் வரை ஊதியம் வழங்கியதா இல்லையா?
3. தங்களின் முதன்மைச் செயலாளர், அரசு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்ணுக்கு ஓர் உயரிய பொறுப்பை வழங்கினாரா இல்லையா?
4. அந்தப் பெண், அரசு சார்பில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா இல்லையா?
5. குற்றஞ்சாட்டப்பட்ட பெண் தங்களின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு வந்திருக்கிறாரா இல்லையா?
6. விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கம் சிக்கியபோது, தங்களின் அலுவலகத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததா இல்லையா?
7. சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா?
ஆகிய 7 கேள்விகளை பினராயி விஜயனுக்கு முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது.

இதற்கிடையில், கேரளாவில் மொத்தம் உள்ள140 தொகுதிகளில் 82 இடங்களில்வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சியை தக்கவைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 56 இடங்கள் கிடைக்கும். பாஜகவுக்கு 1 இடம் மட்டுமே கிடைக்கும் என டைம்ஸ் நவ் மற்றும்சிவோட்டர் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x