

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முதல் வழக்கமான நேரத்தில் காலை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. தற்போது 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் அமலில் இருந்ததால் இதுவரை நாடாளுமன்றம் இருவேறு அமர்வுகளாக நடத்தப்பட்டு வந்தது. காலையில் மாநிலங்களவையும், பிறபகலில் மக்களவையும் நடைபெற்று வந்தன. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்தநி்லையில் நாடாளுமன்றத்தை வழக்கம்போல் காலையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி.க்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, இதனால் நாளை முதல் மாநிலங்களவை காலை 11 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணிவரை நடக்கும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
மக்களவையும் இதேபோன்று காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடக்கிறது. கரோனா வைரஸ் காலகட்டத்தில் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.