காங்கிரஸுக்கு குறைந்த இடங்களே ஒதுக்கும் மாநில கட்சிகள்

காங்கிரஸுக்கு குறைந்த இடங்களே ஒதுக்கும் மாநில கட்சிகள்
Updated on
1 min read

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளை கூட்டணி வைத்திருக்கும் மாநிலக் கட்சிகள் ஒதுக்குகின்றன.

கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் அந்தக் கட்சியானது, மாநிலக்கட்சிகளிடமிருந்து குறைந்த அளவிலான இடங்களை மட்டுமே பெறமுடிகிறது. மெகா கூட்டணி அமைத்தபோதும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும்கூட குறைந்த அளவிலான இடங்களே காங்கிரஸுக்கு வழங்கப்படுகின்றன.

தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம்ஆகிய 5 மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு வெறும் 25 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. 2011-ல் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடத்திலும், 2016-ல் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடத்திலும் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

2020-ல் பிஹார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணியை அமைத்தது காங்கிரஸ். இதில் 74 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது.

அசாமில் 2016-ல் பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தற்போது அங்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறது. அங்கு மகாஜோத் என்ற பெயரில் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது.

கேரள மாநிலத்திலும் 2016-ல்இடதுசாரி ஜனநாயக முன்னணி யிடம் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியை இழந்தது. தற்போது கேரளாவிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அங்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (எம்), ஐக்கிய ஜனதா தளம், புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்), கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்தே போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அதிக தொகுதிகள் இருந்தபோதும் காங்கிரஸ் 92 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதால் காங்கிரஸுக்கு குறைந்த அளவிலான இடங்களே கூட்டணியில் கிடைக்கின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் என பல கட்சிகள் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு பெரும் சவாலாக உள்ளன.

2017-ல் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்தது. அங்கு 106 தொகுதிகளை கேட்டுப் பெற்றது காங்கிரஸ். ஆனால் வெற்றி பெற்றது வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே.

இதனால் பெரும்பாலான மாநில சட்டப் பேரவைத் தேர்தல் களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவிலான இடங்கள் தரப்படுகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து வருவதும், கட்சிக்கு பலமான தலைமை இல்லாததும் ஒரு குறை என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in