Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

கரோனா வைரஸ் ஒழிப்பில் இறுதிகட்டத்தில் உள்ளோம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

கரோனா வைரஸ் ஒழிப்பின் இறுதி கட்டத்தில் இந்தியா உள்ளது என்றும் இதில் வெற்றி பெற வேண்டுமானால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லி மருத்துவ சங்கத்தின் சார்பில் 62-வது வருடாந்திர டெல்லி மாநில மருத்துவ மாநாடு (மெடிகான் 2021) நேற்று முன்தினம் நடைபெற்றது. தரம்ஷிலா நாராயணா மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசிய தாவது:

இந்தியாவில் இப்போது தினமும் 15 லட்சம் பேருக்குகரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிற நாடுகளைப் போல அல்லா மல், நம் நாட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி சீராக உள்ளது. அத்துடன் நம் நாட்டில் தயாராகும் தடுப்பூசிகள் பாதுகாப்பு மிக்கதாகவும் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.

உலகின் ஏழை நாடுகளில் கரோனா வைரஸ் பரவி வரும்நிலையில், தடுப்பூசி போடுவதால் மட்டும் இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது. எனவேதான் உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகிறது.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இதுவரை 62 நாடுகளுக்கு 5.51 கோடி கரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரை, கரோனா வைரஸ் ஒழிப்பின் இறுதிகட்டத்தில் உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டுமானால், 3 நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பூசி திட்டத்தை அரசியலாக்கக் கூடாது, 2-வதாக தடுப்பு மருந்தின் பின்னால் உள்ள அறிவியலை நம்ப வேண்டும், 3-வதாக நம்மைச் சுற்றி உள்ளவர்கள் உரிய நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி போடும் பணியில் தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x